Saturday, August 30, 2008

செந்தமிழ் நாடு - இரா.செம்பியன்

பிற மொழி கலந்து பேசுவதால்
நம் பெருமை உயர்ந்திடுமோ ? - இந்த
பேதைமை நீங்கிப் போகும்
போது பேசும் தமிழ் இனிக்கும்

நூல் வகை தெரிந்தே ஓதுவதால்
நம் நுண் புலன் மெருகேரும் - பின்பு
நாடு நம்மை நாடும் நமது
நற்றமிழ் நலம் விழைந்தே

காலம் இனிதே மாறும் போது
கன்னித் தமிழ் வளரும் - இன்று
வாடிப்போன தமிழ் இனத்தாரின்
வாழ்வும் மலர்ந்து வரும்

மொழியினைப் போற்றும் முனைவர்கள்
இங்கே மூலையில் கிடைக்கின்றார் - சில
மூடர்கள் இங்கே மொழியறியாமல்
முனைவர்க ளாகின்றார்

இந்திய ராயின போதிலும் நாங்கள்
செந்தமிழ் நாட்டினரே - எழில்
விந்தியம் குமரி ஆயிடை
எங்கள் செந்தமிழ் வாழியவே

(ஒளிமயமான எதிர் காலம் என்ற மொட்டு)

இரா.செம்பியன், புதுச்சேரி, இந்தியா
மின்னஞ்சல் : sembian39@gmail.com

0 comments: