Thursday, October 2, 2008

தமிழ் மரபிற்குரிய முப்பால் உண்மைகள் - முனைவர் க.நெடுஞ்செழியன்

சமூகக் கட்டுக் கோப்பிற்குத் தனிமனித ஒழுக்கம் மிகவும் இன்றியமையாத ஒன்று. இத்தகைய தனிமனித ஒழுக்கத்தை வற்புறுத்தும் வகையில்தான் திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை அமைத்துள்ளனர். இதன் உயர்வை அகத்துறை இலக்கியமாகிய குறிஞ்சிப் பாட்டில்,

முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடிற் புணரும்
சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி யையர்க்கு மந்நிலை
எளிய வென்னார் தொல்மருங் கறிஞர்

என்று கபிலர் பாராட்டுவார்.

இத்தகைய ஒழுக்கமும் அதனைப் பேணும் நெறிகளும் தனி மனித வாழ்விலும், சமூக வாழ்விலும் அறநெறிக் கோட்பாடுகளாக மலர்ச்சி பெற்றன. தமிழ் மரபு இதனை அறம் பொருள் இன்பம் என முத்திறக் கோட்பாடுகளாக வரையறை செய்துள்ளது.

இன்பம் தனிமனித வாழ்வை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுவது. பொருள் தனிமனித வாழ்வு, சமூக வாழ்வு, அரச வாழ்வு ஆகிய அனைத்தையும் செழுமையுடன் காப்பாற்ற வல்லது. அறம் தனிமனிதன், சமூகம், நாடு என்ற அனைத்தையும் தழுவிய கட்டுக் கோப்புடன் காத்து நிற்பது. முத்திறக் கூறுகளின் இந்தப் படிமுறை வளர்ச்சியைத் தொல்காப்பியர்,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த அய்ந்திணை மருங்கின்

என்று வரிசைப்படுத்துவார்.

மேலும் படிக்க

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் அவர்களின் தமிழ்வாழ்க்கை

மூதறிஞர் எனவும் செம்மல் எனவும் அழைக்கப்பெறும் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி என்னும் ஊரில் பிறந்தவர்(17.04.1917). இவர் தம் பெற்றோர் வ.சுப்பிரமணியன் செட்டியார் தெய்வானை ஆச்சி என்பதாகும். அண்ணாமலை என்பது இவர்தம் பிள்ளைப்பருவத்துப் பெயராகும். இவருடன் பிறந்தவர்களுள் ஆடவர் இருவர், மகளிர் இருவர் என உடன் பிறந்தார் நால்வராவர். இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்த மாணிக்கனார் தம் தாய்வழிப்பாட்டி, மீனாட்சி ஆச்சியும், தாத்தா அண்ணாமலைச் செட்டியாரும் வளர்க்க, வளர்ந்தார்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் குருகுல முறையில் ஏழாம் அகவை வரை தொடக்கக் கல்வியைத் தம் பிறந்த ஊரில் வாழ்ந்த திரு.நடேச ஐயரிடம் கற்றார். ஐயர் அவர்கள் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையுடன் தொடர்புடையவர்கள். அவர் வழி ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, நன்னெறி, வாக்குண்டாம் நூல்களை ஐயம் திரிபறக் கற்றார்.

பின்னர்ப் பர்மா சென்று கைபழகுதல் என்னும் வணிகத்தொழில் பழகினார். 11 அகவையில் பர்மா சென்ற மாணிக்கனார் இருமுறை தமிழகம் வந்துள்ளார். கடை முதலாளி உரைத்தபடி பொய் சொல்லாத காரணத்தால் வேலையிழந்து தமிழகம் வந்தார். அப்பொழுது மாணிக்கனார்க்கு அகவை பதினெட்டு ஆகும்.

மேலும் படிக்க

‘உலகப் பார்வை கொண்ட ஒப்பிலாத் தலைவர்’: அண்ணா - நா.நந்திவர்மன் பொதுச்செயலர்: திராவிடப்பேரவை

ஒன்றே குலம்! ஒருவனே தேவன் என்பதுபோல் ஒருவரே அண்ணன்! அவர் உலகத் தமிழரின் பொதுச் சொத்து! தனக்கெனத் தனிச்சொத்துச் சேர்க்காமல் தமிழர்க்காக வாழ்ந்த அரிய கருவூலம்! அறிவுப் பெட்டகம்! அண்ணாவை உள்வாங்கிக் கொண்ட உள்ளங்கள் பல கோடி! அவர் உருவாக்கிய அறிவியக்கம் அரசியல் பதவி தேடி வரும் பறவைகள் இடம் சாரும் ஆலமரம் அல்ல! எழுதத் தெரியாத ஏழைக்கும் எழுத்தும் பேச்சும் ஊற்றெனப் பெருக்கெடுக்க உள்ளிருந்து நல்லறிவு புகட்டிய ஆசான்! எவரும் எப்போதும் அவரிடம இரவல் கேட்காமலே எல்லார்க்கும் எல்லாமும் அளித்த அறிவுப் புதையல் அண்ணா!

சிலையாக வழிபட அல்ல அவர் நம்மை சிந்திக்க வைத்தது! அம்பேத்கர் பிறந்த மண் அவரின் நூல்களை மலிவுப் பதிப்பாக்கி பன் மொழிகளில் பெயர்த்து கருத்துப் பரப்புதலே கடமையெனச் செயல்படுகிறது. இங்கோ அண்ணா நினைவிடத்தில் எரிவாயுவை வீணாக்கி ஒளிவிளக்கு ஏற்றி கோயிலாக்கிக் குதுகலிக்கிறார்கள். சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் சடங்குகள் நடக்கின்றன. அவரின் படைப்புகள் அரசு முயற்சியாக அகில உலகமும் சென்றடைய திட்டமில்லை. மூலக்கதையை மறைத்து தழுவல் இலக்கியங்களை மக்கள் உள்ளங்களில் தவழ விடும் முயற்சி வெற்றி பெறாது, இயல்பான ஆற்றல் இருந்தும் முன்னோடிகள் முகவரிகளை மறைக்கும் மனப்பாங்கு வேதனையளிக்கிறது. தொல்காப்பியத்தை தொலைத்து விட்டு பூங்காவில் நறுமணம் நாடுக என்றால் மனம்ஒப்புமா? வள்ளுவத்தை இருட்டடிப்பு செய்துவிட்டு ஓவியம் கண்டு உவந்திடுக என்றால் உள்ளம் ஏற்குமா? இளங்கோவடிகளை மறந்து விட்டு அடியார்க்கு நல்லாரை மட்டுமே அகிலம் போற்றுமா? தன் நூல்கள் தரணியில் பரவ எவருக்கும் ஆசை எழுவது இயல்பு! அதற்காக முன்னூல்கள் மறக்கப்பட வேண்டுமா? வேரின்றி செடி ஏது?விதையின்றி மரமேது? அண்ணாவின்றி நாமேது? தமிழ்நாட்டுக்கே பெயர் சூட்டிய அண்ணாவுக்கு தமிழ்நாட்டரசு காட்டப் போகும் நன்றிக்கடன் அவரின் எழுத்தையும் பேச்சையும் கருத்தையும் எங்கும் பரப்புதலே ஆகும்! நூற்றாண்டிலாவது ஆடம்பரங்களால் அண்ணாவுக்கு சிறுமை சேர்ப்பதைக் காட்டிலும் அவர் நூல்கள் படித்து தம்பிக்கு மடல்கள் படித்து விழிப்புற்றெழுந்த நாம், நம் பின்னவர்க்கும் அறிவியக்க வாயிலை திறந்து வைப்போமாக! அறிவு கொளுத்து வோமாக! மாநிலங்களவையில் அண்ணா முன்மொழிந்த புத்தாக்கச் சிந்தனைகளை நினைவு கூறுவோமாக!

மேலும் படிக்க

தமிழ்ப்பாடத்திட்டத்தில் இடம்பெறவேண்டிய தமிழ்கள் - முனைவர் இரா. திருமுருகன்

நம்மில் சிலர், முத்தமிழ் என்பது தமிழ் மொழியின் வேறொரு பெயர் என்று நினைக்கிறார்கள், அதை முத்தமிழ் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்? என்று அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. வேறு சிலர் முத்தமிழ் என்பன இயல். இசை. நாடகம் என்று தெரிந்துவைத்திருந்தாலும். அவற்றில் இசை என்பது இசைக்கலை என்றும். நாடகம் என்பது மேடை நாடகம் என்றும் கருதுகிறார்கள். பள்ளி விழாக்களில் உரையரங்கம், புல்லாங்குழல் முதலிய கருவியிசையரங்கம், மேடை நாடகம் ஆகியவற்றை நடத்திவிட்டு "முத்தமிழ் விழா நடத்தினோம்" என்கிறார்கள். புல்லாங்குழலில் வாசிப்பது வெறும் இசையே. அதில் தமிழ் இல்லை. எனவே அது இசைத்தமிழ் ஆகாது. அதுபோல் உரையாடல் பேசி நடிக்கும் இன்றைய மேடை நாடகங்கள் வெறும் நடிப்புக் கலையே. அது நாட்டியத்துக்கான தமிழ்ப்பாடல்-நாடகத்தமிழ்-ஆகாது. ஆசிரியர்கள் இதில் தெளிவில்லாதவர்களாக இருந்தால் மாணவர்களுக்கு இவற்றைத் தெளிவாகச் சொல்லிக்கொடுக்க முடியாது. மூன்று தனித்தனி இயல்புடைய தமிழ்களையே முன்னோர் முத்தமிழ் என்று குறித்தனர்.
மேலும் படிக்க