Thursday, October 2, 2008

தமிழ் மரபிற்குரிய முப்பால் உண்மைகள் - முனைவர் க.நெடுஞ்செழியன்

சமூகக் கட்டுக் கோப்பிற்குத் தனிமனித ஒழுக்கம் மிகவும் இன்றியமையாத ஒன்று. இத்தகைய தனிமனித ஒழுக்கத்தை வற்புறுத்தும் வகையில்தான் திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை அமைத்துள்ளனர். இதன் உயர்வை அகத்துறை இலக்கியமாகிய குறிஞ்சிப் பாட்டில்,

முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடிற் புணரும்
சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி யையர்க்கு மந்நிலை
எளிய வென்னார் தொல்மருங் கறிஞர்

என்று கபிலர் பாராட்டுவார்.

இத்தகைய ஒழுக்கமும் அதனைப் பேணும் நெறிகளும் தனி மனித வாழ்விலும், சமூக வாழ்விலும் அறநெறிக் கோட்பாடுகளாக மலர்ச்சி பெற்றன. தமிழ் மரபு இதனை அறம் பொருள் இன்பம் என முத்திறக் கோட்பாடுகளாக வரையறை செய்துள்ளது.

இன்பம் தனிமனித வாழ்வை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுவது. பொருள் தனிமனித வாழ்வு, சமூக வாழ்வு, அரச வாழ்வு ஆகிய அனைத்தையும் செழுமையுடன் காப்பாற்ற வல்லது. அறம் தனிமனிதன், சமூகம், நாடு என்ற அனைத்தையும் தழுவிய கட்டுக் கோப்புடன் காத்து நிற்பது. முத்திறக் கூறுகளின் இந்தப் படிமுறை வளர்ச்சியைத் தொல்காப்பியர்,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த அய்ந்திணை மருங்கின்

என்று வரிசைப்படுத்துவார்.

மேலும் படிக்க

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம் அவர்களின் தமிழ்வாழ்க்கை

மூதறிஞர் எனவும் செம்மல் எனவும் அழைக்கப்பெறும் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி என்னும் ஊரில் பிறந்தவர்(17.04.1917). இவர் தம் பெற்றோர் வ.சுப்பிரமணியன் செட்டியார் தெய்வானை ஆச்சி என்பதாகும். அண்ணாமலை என்பது இவர்தம் பிள்ளைப்பருவத்துப் பெயராகும். இவருடன் பிறந்தவர்களுள் ஆடவர் இருவர், மகளிர் இருவர் என உடன் பிறந்தார் நால்வராவர். இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்த மாணிக்கனார் தம் தாய்வழிப்பாட்டி, மீனாட்சி ஆச்சியும், தாத்தா அண்ணாமலைச் செட்டியாரும் வளர்க்க, வளர்ந்தார்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் குருகுல முறையில் ஏழாம் அகவை வரை தொடக்கக் கல்வியைத் தம் பிறந்த ஊரில் வாழ்ந்த திரு.நடேச ஐயரிடம் கற்றார். ஐயர் அவர்கள் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையுடன் தொடர்புடையவர்கள். அவர் வழி ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, நன்னெறி, வாக்குண்டாம் நூல்களை ஐயம் திரிபறக் கற்றார்.

பின்னர்ப் பர்மா சென்று கைபழகுதல் என்னும் வணிகத்தொழில் பழகினார். 11 அகவையில் பர்மா சென்ற மாணிக்கனார் இருமுறை தமிழகம் வந்துள்ளார். கடை முதலாளி உரைத்தபடி பொய் சொல்லாத காரணத்தால் வேலையிழந்து தமிழகம் வந்தார். அப்பொழுது மாணிக்கனார்க்கு அகவை பதினெட்டு ஆகும்.

மேலும் படிக்க

‘உலகப் பார்வை கொண்ட ஒப்பிலாத் தலைவர்’: அண்ணா - நா.நந்திவர்மன் பொதுச்செயலர்: திராவிடப்பேரவை

ஒன்றே குலம்! ஒருவனே தேவன் என்பதுபோல் ஒருவரே அண்ணன்! அவர் உலகத் தமிழரின் பொதுச் சொத்து! தனக்கெனத் தனிச்சொத்துச் சேர்க்காமல் தமிழர்க்காக வாழ்ந்த அரிய கருவூலம்! அறிவுப் பெட்டகம்! அண்ணாவை உள்வாங்கிக் கொண்ட உள்ளங்கள் பல கோடி! அவர் உருவாக்கிய அறிவியக்கம் அரசியல் பதவி தேடி வரும் பறவைகள் இடம் சாரும் ஆலமரம் அல்ல! எழுதத் தெரியாத ஏழைக்கும் எழுத்தும் பேச்சும் ஊற்றெனப் பெருக்கெடுக்க உள்ளிருந்து நல்லறிவு புகட்டிய ஆசான்! எவரும் எப்போதும் அவரிடம இரவல் கேட்காமலே எல்லார்க்கும் எல்லாமும் அளித்த அறிவுப் புதையல் அண்ணா!

சிலையாக வழிபட அல்ல அவர் நம்மை சிந்திக்க வைத்தது! அம்பேத்கர் பிறந்த மண் அவரின் நூல்களை மலிவுப் பதிப்பாக்கி பன் மொழிகளில் பெயர்த்து கருத்துப் பரப்புதலே கடமையெனச் செயல்படுகிறது. இங்கோ அண்ணா நினைவிடத்தில் எரிவாயுவை வீணாக்கி ஒளிவிளக்கு ஏற்றி கோயிலாக்கிக் குதுகலிக்கிறார்கள். சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் சடங்குகள் நடக்கின்றன. அவரின் படைப்புகள் அரசு முயற்சியாக அகில உலகமும் சென்றடைய திட்டமில்லை. மூலக்கதையை மறைத்து தழுவல் இலக்கியங்களை மக்கள் உள்ளங்களில் தவழ விடும் முயற்சி வெற்றி பெறாது, இயல்பான ஆற்றல் இருந்தும் முன்னோடிகள் முகவரிகளை மறைக்கும் மனப்பாங்கு வேதனையளிக்கிறது. தொல்காப்பியத்தை தொலைத்து விட்டு பூங்காவில் நறுமணம் நாடுக என்றால் மனம்ஒப்புமா? வள்ளுவத்தை இருட்டடிப்பு செய்துவிட்டு ஓவியம் கண்டு உவந்திடுக என்றால் உள்ளம் ஏற்குமா? இளங்கோவடிகளை மறந்து விட்டு அடியார்க்கு நல்லாரை மட்டுமே அகிலம் போற்றுமா? தன் நூல்கள் தரணியில் பரவ எவருக்கும் ஆசை எழுவது இயல்பு! அதற்காக முன்னூல்கள் மறக்கப்பட வேண்டுமா? வேரின்றி செடி ஏது?விதையின்றி மரமேது? அண்ணாவின்றி நாமேது? தமிழ்நாட்டுக்கே பெயர் சூட்டிய அண்ணாவுக்கு தமிழ்நாட்டரசு காட்டப் போகும் நன்றிக்கடன் அவரின் எழுத்தையும் பேச்சையும் கருத்தையும் எங்கும் பரப்புதலே ஆகும்! நூற்றாண்டிலாவது ஆடம்பரங்களால் அண்ணாவுக்கு சிறுமை சேர்ப்பதைக் காட்டிலும் அவர் நூல்கள் படித்து தம்பிக்கு மடல்கள் படித்து விழிப்புற்றெழுந்த நாம், நம் பின்னவர்க்கும் அறிவியக்க வாயிலை திறந்து வைப்போமாக! அறிவு கொளுத்து வோமாக! மாநிலங்களவையில் அண்ணா முன்மொழிந்த புத்தாக்கச் சிந்தனைகளை நினைவு கூறுவோமாக!

மேலும் படிக்க

தமிழ்ப்பாடத்திட்டத்தில் இடம்பெறவேண்டிய தமிழ்கள் - முனைவர் இரா. திருமுருகன்

நம்மில் சிலர், முத்தமிழ் என்பது தமிழ் மொழியின் வேறொரு பெயர் என்று நினைக்கிறார்கள், அதை முத்தமிழ் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்? என்று அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. வேறு சிலர் முத்தமிழ் என்பன இயல். இசை. நாடகம் என்று தெரிந்துவைத்திருந்தாலும். அவற்றில் இசை என்பது இசைக்கலை என்றும். நாடகம் என்பது மேடை நாடகம் என்றும் கருதுகிறார்கள். பள்ளி விழாக்களில் உரையரங்கம், புல்லாங்குழல் முதலிய கருவியிசையரங்கம், மேடை நாடகம் ஆகியவற்றை நடத்திவிட்டு "முத்தமிழ் விழா நடத்தினோம்" என்கிறார்கள். புல்லாங்குழலில் வாசிப்பது வெறும் இசையே. அதில் தமிழ் இல்லை. எனவே அது இசைத்தமிழ் ஆகாது. அதுபோல் உரையாடல் பேசி நடிக்கும் இன்றைய மேடை நாடகங்கள் வெறும் நடிப்புக் கலையே. அது நாட்டியத்துக்கான தமிழ்ப்பாடல்-நாடகத்தமிழ்-ஆகாது. ஆசிரியர்கள் இதில் தெளிவில்லாதவர்களாக இருந்தால் மாணவர்களுக்கு இவற்றைத் தெளிவாகச் சொல்லிக்கொடுக்க முடியாது. மூன்று தனித்தனி இயல்புடைய தமிழ்களையே முன்னோர் முத்தமிழ் என்று குறித்தனர்.
மேலும் படிக்க

Saturday, August 30, 2008

முழுத்தமிழ்ப் புலவர்கள் - முனைவர் இரா. திருமுருகன்

தமிழ்ப்புலமை பெறப் பட்டப்படிப்புப் படிக்கும் மாணாக்கர்களுக்கு இயற்றமிழ் என்னும் மூன்றிலொரு பங்குத் தமிழ் மட்டுமே கற்பிக்கப்படுகிறது, அதனைக் கற்று அவர்கள் அரைகுறைத் தமிழ்ப் புலவர் களாகவே வெளிவருகின்றனர், அவர்களை அரைத் தமிழ்ப்புலவர்கள் என்றுகூடச் சொல்ல முடியாது. மற்ற இரண்டு தமிழ்களையும் கற்றால் மட்டுமே அவர்களைத் 'தமிழ் முழுதறிந்த தன்மையர்' (சிலம்பு. அரங்கேற்று. 38) என்று இளங்கோவடிகள் சொல்வதுபோல், முழுத்தமிழ்ப்புலவர்கள் என்று சொல்லமுடியும்.

முத்தமிழ்

இசை நாடகம் என்னும் கலைகளையும் உள்ளடக்கிய ஒரே மொழி நமது தமிழ்மொழி. அதனால்தான் அது 'முத்தமிழ்' எனப்படுகிறது. நம்மில் சிலர், முத்தமிழ் என்பது தமிழ் மொழியின் வேறொரு பெயர் என்று மேற்போக்காக நினைக்கிறார்கள். அதை முத்தமிழ் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்? என்று அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. வேறு சிலர் முத்தமிழ் என்பன இயல், இசை, நாடகம் என்று தெரிந்து வைத்திருந்தாலும், அவற்றில் இசை என்பது இசைக்கலை என்றும், நாடகம் என்பது மேடை நாடகம் என்றும் கருதுகிறார்கள். யாழ், குழல் முதலிய இசைக்கருவிகளில் கிடைப்பது வெறும் இசையே. அதில் தமிழ் இல்லை. எனவே அது இசைத்தமிழ் ஆகாது. அதுபோல் உரையாடல் பேசி நடிக்கும் இன்றைய மேடை நாடகம் வெறும் நடிப்புக் கலையே, அது நாடகத்தமிழ் ஆகாது. மூன்று தனித்தனி இயல்புடைய தமிழ்களையே முன்னோர் முத்தமிழ் என்று குறித்தனர்.

மேலும் படிக்க

உலகாய்தம் பெயர்க்காரணம் - முனைவர் க.நெடுஞ்செழியன்

மனித வாழ்வை அடித்தளமாகக் கொண்டதோர் உலகியல் கோட்பாடே உலகாய்தம். இந்திய மெய்ப்பொருள் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகக் குறிக்கப்படுவதைப் போன்றே தமிழகத்தில் வழங்கிய மெய்ப்பொருள்களிலும் காலத்தால் மிகவும் முந்தியதாக இக்கோட்பாடு திகழ்ந்துள்ளது.

இக்கோட்பாட்டிற்கெனத் தனியாக நூல்கள் வழங்கி வந்ததாகவும், அரசர்கள் கற்க வேண்டிய தலையாய கல்வித் துறைகளை இது உள்ளடக்கி இருந்ததாகவும் ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். இருப்பினும் இக்காலத்தில் உலகாய்தத்தை அடிப்படையாகக் கொண்ட மூலநூல்கள் ஏதும் இல்லை. கிடைக்கும் சான்றுகள் அனைத்தும் இதனை எதிர்த்தோரும் மறுத்தோரும் குறித்துள்ள குறிப்புகளாகவே உள்ளன.

மேலும் படிக்க

இனமும் மொழியும் இரு கண்கள்; இல்லாவிட்டால் வெறும் புண்கள்! - 3 - முனைவர் தமிழப்பன்

காவிரிச் சிக்கலில் தமிழக ஆட்சியர்கள் நடந்துகொண்ட முறைகள் வெட்கக் கேடானவை; கேலிக்கூத்தானவை, தும்பை விட்டு வாலைப் பிடித்துக்கொண்டார்கள். அதனால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் பட்டபாடு. இழந்த இழப்புகள் கொஞ்ச நஞ்சமா? 490 கோடி கன அடி எங்கே? அதன்பின் 390 அதுவும் குறுகி. 195 ஆனதேன்? இந்திராகாந்தி சொன்னதற்காக உச்ச நீதி மன்ற வழக்கைத் திரும்பப்பெற்ற கொடுமையால் நிகழ்ந்தது? எதனால் நிகழ்ந்தது? எதற்காக நிழகழ்ந்தது? இனவுரிமை பற்றி எள்ளளவாவது எண்ணியிருந்தால் இப்படியெல்லாம் செய்திருப்பார்களா? எந்த இனத்துக்காரனாவது இந்தியாவிலாகட்டும் பிற நாடுகளிலாகட்டும், தன் இனத்தைக் காட்டிக்கொடுத்திருக்கிறானா? கொடுத்திருப்பானா? தன்னலத் திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் இன உரிமையை விட்டுக் கொடுத்தவர்களை இனக்காவலர் என்று கூறும் கொடுமை இங்குத்தானே நடந்து கொண்டிருக்கிறது? அடுக்கு மொழியாலும் மயக்கு மொழியாலும் தமிழர்களை ஏமாற்றிவரும் நிலையை என்னென்பது? தமிழக மக்களை ஏமாறிகளாகவும் இளிச்ச வாயர்களாகவும் பிற மாநிலத்தவர் எண்ணச் செய்தவர் யார்? அதற்கு இடங்கொடுத்தவர் யார்? இந்த அரசியல்வாதிகளால் தானே இந்த அவப்பெயர் தமிழர்க்கு வாய்த்தது. எழுச்சி வரும் போது எதையாவது சொல்லி மழுங்கடிக்கும் செயலைச் செய்தது யார்? செய்வது யார்?

இயல்பாகவே தமிழினம் இப்படிப்பட்டது தானா? புறநானூற்று வீரமெல்லாம் போனதெங்கே? தமிழரை வழி நடத்த வாய்த்த தலைவர்கள் தடம் மாறியதால்-தடுமாறியதால் அல்லவா இந்தத் தலைக்குனிவு அரசன் எவ்வழி அவ்வழி தானே குடிகள்? தளபதியின் எண்ணப்படித்தானே படைகளின் செயற்பாடு அமையும். தமிழினத்தைலைவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல் தடுக்க வேண்டிவரும் அதற்கு நாம் செய்யவேண்டியதென்ன?

நடுநிலைக் கண்ணோட்டத்தோடு அரசியற் செயற்பாடுகளை ஆட்சி நடவடிக்கைகளை ஆய்வு செய்து உண்மையை எடுத்துக்கூறும் துணிவும் நமக்கு வரவேண்டும் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்ற பெருமகனின் செம்மாந்த கொள்கையை மேற்கொள்ள என்ன தயக்கம்? தயக்கமும் மயக்கமும் தமிழினத்தைச் சீர்குலைத்துவிடும் என்பதைத் தெளிதல் வேண்டும்.

மேலும் படிக்க